காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தானில் கவிழுமா ? சச்சின் பைலட் Vs காந்தி குடும்ப அரசியல் !!

மத்தியப் பிரதேசத்தில் நடந்ததைப்போல ராஜஸ்தான் காங்கிரஸ் அரசும் சிக்கலில் உள்ளதாகத் தோன்றுகிறது.

திங்கள்கிழமை நடந்த மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. ஆனாலும், ஆட்சிக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஒரு எம்.எல்.ஏ., எல்லாம் நல்லபடியாக இருப்பதாக கூறினார் என்றும் ஏ.என்.ஐ. தெரிவிக்கிறது.

முன்னதாக, தமது அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ட்வீட் செய்த பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, உண்மையில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இருந்தால், அவர்கள் உடனடியாக தங்கள் பலத்தை சட்டப் பேரவையில் நிரூபிக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அவர்கள் எம்.எல்.ஏ.க்களை விடுதிக்கு அழைத்துச் சென்றால், அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று பொருள் என்று கூறினார் அவர்.

துணை முதல்வரும் அதிருப்தி தலைவருமான சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவருக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும், பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கலாம் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார்.