கவலைப்படாதே மகனே: சோனியா அட்வைஸ்

ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க நேர்ந்து, பிரதமர் பதவி காங்கிரசிற்கு கிடைக்காவிட்டால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மகன் ராகுலிடம் சோனியா கூறி உள்ளதாக தெரிகிறது.

பா.ஜ.,வுக்கு 200 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று சோனியா நினைக்கிறார். அவருக்கு நெருக்கமான காங்., மூத்த தலைவர்களான அகமது படேல், சாம் பிட்ரோடா, ம.பி., முதல்வர் கமல்நாத் போன்றோர் கூறிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
இந்த தலைவர்களிடம் பேசும்போது, பா.ஜ., அல்லாத அரசு அமைய நேரிடும் வாய்ப்பு உள்ளதால், திரிணாமுல் காங்., தலைவர் மம்தா, பகுஜன் தலைவர் மாயாவதி ஆகியோருடன் நட்புடன் இருக்குமாறும் சோனியா யோசனை தெரிவித்துள்ளார்.

பா.ஜ., அல்லாத அரசு அமையும்பட்சத்தில், பிரதமர் பதவி தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று ராகுலும் பிரியங்காவும் நினைப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.ஓட்டு எண்ணிக்கைக்கு முன் பிரதமர் தேர்வில் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று காங்., தலைவர் குலம் நபி ஆசாத் வலியுறுத்தினார். ஆனால் அப்படி சொல்லி அதை ஒரு பிரச்னை ஆக்க வேண்டாம் என்று நினைக்கிறதாம் காங்., 

ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்ள தயார் என்று ஏற்கனவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்ட பலர் ஆகியோர் அறிவித்து விட்டனர். ஆனால், மம்தா, மாயாவதி, அகிலேஷ், சந்திரபாபு, சந்திரசேகரராவ் போன்றவர்கள் ராகுலுக்கு இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தான் காங்., அடக்கி வாசிக்கிறது.


காங்கிரசை பொறுத்தவரை, இப்போதைக்கு பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். எனவே ராகுலை பிரதமராக்குவதில் அக்கட்சி அவசரம் காட்டவில்லை.இந்த தேர்தல் பிரசாரத்தில் சோனியா தீவிரமாக ஈடுபடவில்லை. அதற்கு மாறாக ராகுலும் பிரியங்காவும் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். 

மே 23ம் தேதி, அதாவது தேர்தல் முடிவுகள் வெளிவரும் அன்று, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் சோனியா கூட்டி உள்ளார். இதில், ஸ்டாலின், சரத்பவார், மாயாவதி, அகிலேஷ், சந்திரபாபு, சந்திரசேகரராவ், நவீன் பட்நாயக், ஜெகமோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கோவா சம்பவத்தை ஒரு உதாரணமாக காங்., நினைக்கிறது. அங்கு பெரிய கட்சியாக காங்., ஜெயித்தாலும், மற்ற கட்சிகளை சரி செய்து பா.ஜ., ஆட்சி அமைத்துவிட்டது. அது போல் மத்தியிலும் நடந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது காங்.,


கோல்கட்டா கலவரத்திற்குப் பிறகு தேர்தல் பிரசாரத்தை ஒரு நாள் முன்பே முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த பிரச்னையில் திரிணாமுல் கட்சிக்கு காங்., மாயாவதி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வழக்கம் போல், மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்க மார்க்சிஸ்ட் மறுக்கிறது.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுக்கு விழும் ஓட்டுகள், இடம் மாறினால் அது பா.ஜ.,வுக்கு சாதகமாக போகும் என்று திரிணாமுல் அஞ்சுகிறது. ஒரு திரிணாமுல் தலைவர் கூறும்போது, ‛‛எங்களுக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் கம்யூனிஸ்டுக்கு விழும் ஓட்டில் 10 சதவீதம் குறைந்தாலும் அது பா.ஜ.,வுக்கு சாதகமாகி எங்களுக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்துவிடும்” என்கிறார்.சிறுபான்மையினர் குறைவாக உள்ள 15 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்றும் திரிணாமுல் நினைக்கிறது.