கர்நாடகாவின் பிடிவாதத்தால் கருகும் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள்; தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள் தான்: ராமதாஸ் கண்டனம்

கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதால் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளும் இந்திய குடிமக்கள் தான் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பருவ நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கருகும் பயிர்களைக் காக்க காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த வேண்டுகோளை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்து விட்டார்.

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாததற்காக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; கடுமையாக கண்டிக்கத்தக்கவை. கர்நாடக அணைகளில் 40 டி.எம்.சிக்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து 39.77 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பது உண்மை தான்.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் பாசனப் பருவம் முடிவடைந்து விட்ட நிலையில், அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீருக்கு தேவை இருக்காது. குடிநீர் தேவைகளுக்காக 2 டி.எம்.சி மற்றும் குறைந்தபட்ச நீர் இருப்பு 8 டி.எம்.சி போக மீதமுள்ள 30 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு திறந்து விடலாம். தமிழகத்திற்கு தண்ணீர் மறுக்க கர்நாடகத்திற்கு நியாயமான காரணம் எதுவுமில்லை.

மாறாக, கர்நாடகத்தில் கோடைப் பாசனம் செய்ய தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவும், அடுத்த சில மாதங்களில் அங்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழகப் பாசன நலன்களை அழித்து கர்நாடக நலன்களைக் காப்பாற்றிய பரமாத்மாவாக தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தான் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று சித்தராமய்யா கூறி வருகிறார். குறுகிய அரசியல் லாபங்களுக்காக, அண்டை மாநிலத்திலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது நல்லதல்ல.

ஆனால், அரசியல் லாபங்களை மட்டுமே கணக்கிட்டுப் பழகிப் போன கர்நாடக ஆட்சியாளர்களுக்கு இந்த அறமும், நியாயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கர்நாடக அணைகளில் 80 டி.எம்.சி தண்ணீர் இருந்தாலும் கூட, போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கூறி தட்டிக்கழிக்கவே செய்திருப்பார்கள்.

கர்நாடக ஆட்சியாளர்களின் இந்த குணத்தை உணர்ந்து தான் காவிரி நீர்ப்பகிர்வு சிக்கல் தொடர்பாக கர்நாடகத்துடன் இனி எந்த பேச்சும் இல்லை; உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் மூலமாகவே நீதி பெறுவது என்று தமிழக அரசு முடிவெடுத்து அதன்படி செயல்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் போது காவிரியில் தண்ணீர் கேட்டு சித்தராமய்யாவுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியதே தவறாகும்.

காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கும்படி ஆணையிட வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து முடித்துள்ள உச்சநீதிமன்றம், மறுஅறிவிப்பு வரும் வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 4&ஆம் தேதி ஆணையிட்டிருந்தது. 2017&ஆம் ஆண்டு நவம்பர் 21&ஆம் தேதி அந்த ஆணையை உச்சநீதிமன்றம் மறு உறுதி செய்தது.

ஆனால், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி கூட தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கத் தவறிய நிலையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரியில் தண்ணீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பினாமி எடப்பாடி அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அஞ்சி, கர்நாடக அரசுக்கு பெயரளவில் கடிதம் எழுதியுள்ளது. தப்பிக்கும் இந்த தந்திரத்தால் எந்த பயனுமில்லை.

கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 54.30 அடியாக, அதாவது அணையின் நீர் இருப்பு 20.25 டி.எம்.சியாக குறைந்துவிட்டது. இதனால், அணையிலிருந்து பாசனத் தேவைகளுக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 7,000 கன அடியாக கடந்த மாதம் குறைக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 10,000 கனஅடியாக உயர்த்தப்பட்ட நீர் வெளியேற்றம் 07.01.2018 முதல் 2500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சம்பா பயிருக்கு பிப்ரவரி வரை வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் சம்பா பயிர் கருகுவதை தடுக்க முடியாது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற ஆணையையும் கர்நாடக அரசு மதிக்காத நிலையில், இப்பிரச்சினையில் மத்திய அரசு தான் தலையிட்டு தமிழகத்திற்கு நீதி பெற்றுத் தர வேண்டும். ஆனால், மத்திய ஆட்சியாளர்களும் கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை வேடிக்கைப் பார்ப்பது மிகப்பெரிய கடமை தவறிய செயலாகும்.

தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள் தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். எனவே, குறுகிய அரசியல் லாபங்களை புறந்தள்ளிவிட்டு, தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற காவிரியில் உடனே தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.