‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை, ‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ என்ற தலைப்பில், மலையாளத்தில், புத்தகமாக எழுதியுள்ள, கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா: எனக்கு பூர்வீகம், கேரளா. உடன் பிறந்தோர், 11 பேர்; ஏழாவதாக பிறந்தவள் நான். சிறு வயது முதலே, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, கன்னியாஸ்திரியாக மாறினேன்.அதற்காக, முறையான பயிற்சிகள் பெற்று, 20 வயதில் கன்னியாஸ்திரி ஆனேன்;

இப்போது வயது, 54. கர்த்தருக்கு பயந்த, நேர்மையான கன்னியாஸ்திரியாக இருக்கிறேன்; ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.நான் மிகவும் வெகுளியாக இருந்த காலத்தில், கிறிஸ்துவ சபைகளில், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்காது என, நினைத்தேன். ஆனால், காலப் போக்கில், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து அறிய துவங்கினேன்; அதிர்ச்சி அடைந்தேன்.அந்த குற்றங்களை முதலில், நானும் நம்பவில்லை.

ஆனால், ஒரு நாள் எனக்கே, அந்த கசப்பான அனுபவம் ஏற்பட்டது. நன்கு பழகிக் கொண்டிருந்த பாதிரியார் ஒருவர், திடீரென என்னிடம் அத்துமீற முயன்றார். அதை சற்றும் எதிர்பார்க்காத நான், கடுமையாக போராடி, அவர் பிடியிலிருந்து தப்பினேன்.அந்த பயங்கரம், நிறைய வலிகளையும், வேதனைகளையும் தந்தது. அதற்குப் பின், மூன்று பாதிரியார்களும், மடத்தில், நான்கு பாதிரியார்களும் என்னிடம் அத்துமீற முயன்றனர்.

அப்போதும், கடுமையான எதிர்ப்பை காட்டி, என்னை காப்பாற்றிக் கொண்டேன்.இதுபோல, நாட்டில் தினமும், ஏராளமான கன்னியாஸ்திரிகள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதை முறையிட, சபையில் வழியே இல்லை. மீறி வெளியே சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் முதல், சக கன்னியாஸ்திரிகள் வரை, நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதன் பின் தான், கிறிஸ்துவ சபைகளில், கன்னியாஸ்திரிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து, மலையாளத்தில் புத்தகம் எழுதினேன். அச்சேறும் முன்பே, பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனினும், அந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மொழிகளில் மாற்றம் செய்ய உள்ளேன்.என்ன தான் இருந்தாலும், பாதிரியார்களை காப்பாற்றவே, கிறிஸ்துவ சபைகள் முயற்சிக்கும்.

இங்கு, சமநீதி என்பதே கிடையாது. அது கிடைக்கும் வரை போராடுவேன். என்னையும் தனிமைப்படுத்தியுள்ளனர்; மனரீதியாக துன்புறுத்துகின்றனர். கன்னியாஸ்திரிகளும் என்னிடம் பேசுவதில்லை; உணவு கிடைப்பதை கூட, தடை செய்கின்றனர்!