கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தம்பிதுரை, விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று கரூரில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி கூறுகையில், ”கரூர் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமையவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இதனால் 300 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர் குப்புச்சிபாளையத்தில் அமைய உள்ள மருத்துவக்கல்லூரியை இடமாற்ற தம்பிதுரை மிகத் தீவிரமாக முயற்சிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரும் தம்பிதுரை இதுவரை தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை மாற்றக் கூடாது.

அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 28-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என்றார் செந்தில் பாலாஜி.