கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.

சுதா திவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலில் கருங்கல்லை வைத்து தேய்த்துள்ளார்.

இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.அந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற குழந்தை நல அமைப்பினரும், போலீசாரும் குழந்தையை மீட்டுள்ளனர்.

ஆசிரியை சுதாவையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.விசாரணையில் சுதா, அந்த குழந்தையை சட்டவிதிகளுக்கு புறம்பாக தத்தெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தை, குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.