கமலின் அரசியல் பயணத்தை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் பேட்டி

கமல் அரசியல் பயணம் தொடங்கியதை தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என ரஜினி பேட்டி அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் கூறிய கருத்துகள், அவரது ட்விட்டர் பதிவுகள் காரணமாக அவருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. கமலின் பதிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது.

அரசியலில் குதிப்பீர்களா என்று ‘தி இந்து’ தமிழ் நடத்திய யாதும் தமிழே நிகழ்ச்சியில் கமலிடம் கேட்டபோது, நான் ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறேன். நேரம் வரும், நிச்சயம் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கலையுலகில் எனக்கு மூத்த அண்ணன் கமல் இதை நன்கு அறிந்தவர். ஒருவேளை, இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பார். இப்போது கேட்டால் உடன் வாருங்கள் என்று கூறுவார்” என்று பேசி இருந்தார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சி, கொடி சின்னம் தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில், கமல்ஹாசன் அதிரடியாக தன் கட்சியின் பெயரை அறிவித்தல், சுற்றுப்பயணம் முதலியவை குறித்து அறிக்கை அளித்துவிட்டார். இது குறித்து ரஜினிகாந்த்,  தான் இதை எதிர்ப்பார்க்கவில்லை என தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

எம்ஜிஆர் கொள்கையை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா?

கண்டிப்பாக, ஓரளவு பின்பற்றுகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி உள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல் அரசியல் அறிவிப்பை நீங்கள் முன் கூட்டியே எதிர்பார்த்தீர்களா?

இல்லை நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்களும் கமலும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?

அதற்கு காலம் தான் பதில் சொல்லும், பார்க்கலாம்.

சட்டமன்றத் தேர்தலை சந்திப்பேன் என்று கூறியுள்ளீர்கள் 6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா?

கண்டிப்பாக சந்திப்பேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.