
கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு
கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில், பிரபல இசையமைப்பாளரும், பாடகரும் “இசைப்புயல் ரஹ்மானின் சகோதரியுமான ரெஹானா தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள “ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல” என்னும் கற்பனை கலந்த நகைச்சுவை பாணி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களால் கடந்த பெப்ரவரி 24ம் திகதி சென்னையில் நடத்திவைக்கப்பட்டது. பல திரைப்படத்துறை முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்
அறிமுக இயக்குனர் வி. விக்னேஸ் கார்த்திக் கதைஎழுதி இயக்கி உள்ள இந்த நகைச்சுவை கலந்த திரைப்படத்தில் புதுமுகம் அசார் மற்றும் “சூது கவ்வும்” புகழ் சஞ்சிதா ரெட்டி ஆகியோர் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, மன்சூர் அலிகான், “வழக்கு எண் 18-9 புகழ் முத்துராமன் உமா பத்மநாதன், “இருக்கு ஆனா இல்லை” புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், ராமர் டாக்டர் சர்மிலி மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களின் நடித்துள்ளார்கள்.
மேற்படி திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாடகி ரெஹானா இந்த திரைப்படம் வெளிவருவது தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார்.
இந்த திரைப்படம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “படத்தின் ட்ரெயிலரை வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவிக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். கற்பனைக் கலந்த நகைச்சுவை மேலோங்கியுள்ள இந்த திரைப்படத்தைப் பார்த்து மகிழ உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றார்கள். யுரியுப் மூலம் இந்த உண்மையை அறியக்கூடிதாக உள்ளது. மேலும் பிரபல இயக்குனர் திரு முருகதாஸ் தனது ரிவிட்டரில் இந்த திரைப்படம் நகைச்சுவைக்காக உலகெங்கும் உள்ள ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளமை எமக்கு இன்னும் உற்சாகத்தைத் தருகின்றது ” என்றார்