கனடாவுக்கு சீனா எச்சரிக்கை – எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.

சீனா தனது அதிகரித்துவரும் மக்கள் தொகையை குறைக்க இந்த பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனையடுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்து உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.ஆனாலும் தொடர்ந்து சீனா மீது இந்த பழங்குடி மக்கள் குற்றச்சாட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பி வந்த வண்ணமே இருந்தது.

இந்நிலையில் தற்போது கனடா நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. அப்போது அடிமைகளின் கூடாரங்களில் பழங்குடி மக்கள் அடைத்து வைக்கப்படுகிறார்கள் என்ற வார்த்தை அங்கு பிரயோகிக்கப்பட்டது. இதற்கு சீன வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அனாவசியமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை சீனா மீது சுமத்தி தங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என சீனா, கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.