கத்துவா சிறுமிக்காக கற்பழிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கற்பழிப்பு முயற்சி வழக்கில் கைது

காஷ்மீரின் கத்துவா நகரில் இந்த வருடம் ஜனவரியில் கோவில் ஒன்றிற்குள் 8 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு, போதை பொருள் கொடுக்கப்பட்டு, கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல போராட்டங்களும் நடந்தன.

இதனை தொடர்ந்து சிறுமிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜம்முவை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான தலீப் உசைன் என்பவர் பேரணி ஒன்றை நடத்தினார். இதனால் பிரபலம் அடைந்த அவர் இந்த வழக்கில் சிறுமியின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகி வாதிட்டார்.

இந்நிலையில், உசைன் மீது அவரது உறவுக்கார பெண் ஒருவர் கற்பழிப்பு முயற்சி புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் போலீசில் கூறும்பொழுது, கடந்த ஜூனில் கால்நடைகளுக்கு புல் பறிக்க சென்றேன். சத்வா வன பகுதியில் உசைனை சந்தித்தேன். அவர் கையில் டோக்கா (ஆயுதம்) இருந்தது.

என்னை தரையில் தள்ளிய அவர் அந்தரங்க பகுதிகளை தொட்டார். தொடர்ந்து கற்பழிக்க முற்பட்டார். ஆனால் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். அதன்பின் இந்த சம்பவம் பற்றி போலீசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூற கூடாது என மிரட்டினார். அப்படி கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் கூறினார். இதனால் யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. பின்னர் எனது கணவரிடம் ஜூலை 31ந்தேதி இந்த சம்பவம் பற்றி கூறினேன் என புகாரில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து உசைனை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், கத்துவா சம்பவத்தில் வாதிட்டதற்காக தனக்கு எதிராக சதி நடக்கிறது என கூறியுள்ளார்.

இந்த வருடம் ஜூனில் உசைனின் மனைவி, தன்னை அடித்து கொடுமைப்படுத்தி, வரதட்சணை கேட்கிறார் என உசைன் மீது போலீசில் புகார் கூறினார். இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.