கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா?- வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு திட்டத்துக்கான வேலைகளில் ஈடுபட முயன்றதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் அறப்போராட்டம் நடத்தினர். இந்நிலையில், காவல்துறை அடக்குமுறையை ஏவியது.

மேலும், இத்தகைய திட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது அபாண்டமாகப் பொய் வழக்குப் போட்டு தமிழக காவல்துறை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. ஜெயராமன் உள்ளிட்டோரை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை, நேற்று 10 பேர் மீது புதிதாக ஒரு பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளது.

அடக்குமுறைச் சட்டங்களாலோ, காவல்துறையின் அநீதியான அடக்குமுறையாலோ, சிறைச்சாலைகளில் அடைப்பதாலோ மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அத்தகைய பாசிச போக்கில் ஈடுபட்ட அரசுகளுக்கு வரலாறு பாடம் கற்பித்து இருக்கிறது” என்று வைகோ தெரிவித்துள்ளார்.