கட்டுமான பணியின்போது பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி 12 பேர் உயிருடன் மீட்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. இவர் அங்கு ‘பின்குஷன் மாண்டிசோரி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்ற நடுநிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக இதன் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. வருகிற கல்வியாண்டில் இந்த பள்ளியை திறப்பதற்காக இரவு பகலாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர்.


2-வது மாடிவரை கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் முன்பகுதியில் போர்டிகோ கட்டும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மதியம் பெண்கள் உள்பட சிலர் போர்டிகோவின் கீழே நின்று சிமெண்டு கலவையை மேலே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று போர்டிகோ இடிந்து விழுந்தது. இதைப்பார்த்ததும் கீழே நின்ற தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேல்பகுதியில் நின்றிருந்தவர்களும், கீழே நின்றிருந்தவர்களில் சிலரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்ததும் மற்ற தொழிலாளர்கள் அங்கு ஓடிவந்தனர்.

இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

13 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் சி.எம்.சி.யில் சேர்க்கப்பட்டிருந்த பாக்கியராஜ் (வயது 45) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தகவல் அறிந்ததும் அமைச்சர் நிலோபர்கபில் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பலியான பாக்கியராஜ் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். காயமடைந்தவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.