கங்கை நதியில் சரக்கு படகு இயக்கும் திட்டம்

நாட்டில் முதல் முறையாக, உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கங்கை நதியில் இயக்கப்பட்ட சரக்கு படகை, பிரதமர் நரேந்திர மோடி, 12ல் வாரணாசியில் வரவேற்க உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இருந்து, கங்கை நதியில், பெப்சிகோ நிறுவனத்தின், 16 கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட சரக்கு படகு, எம்.வி., – ஆர்.என்.தாகூர், இன்று புறப்பட்டது. இந்த கன்டெய்னர்களில், பெப்சி நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர்பான தயாரிப்புகள் உள்ளன. சரக்கு படகு பயணத்தை, கப்பல் துறை செயலர் கோபால் கிருஷ்ணா மற்றும் பெப்சிகோ நிறுவன உயரதிகாரிகள், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த படகு, 12ல், உ.பி., மாநிலம், வாரணாசியை வந்தடையும். அப்போது, அந்த படகை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளதாக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக, நதியில் படகு மூலம் சரக்கு எடுத்து செல்லும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.