கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

கங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கூத்தாநல்லூரில் நேற்று நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதாலேயே உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. கடைசி நேரத்தில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக சிலர் குறை கூறுகின்றனர்.

ராணுவ தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைப்பதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்புக் கொடி காட்டி, ‘கோ பேக்’ என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மறுநாள் அதே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக ஆளுநரிடம் மனுகொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

அரசியலில் முடிவு எடுக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகின்றார். அவரது தலைமை சரியாக இருந்திருந்தால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றிருக்கும்.

அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் தரமானதாக இல்லை. அந்த உபகரணங்கள் யாவும் தயாரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்தோ வாங்காமல் இடைத்தரகர்களிடம் வாங்கியுள்ளனர். அதுபோன்ற உபகரணங்கள் பல மருத்துவமனைகளில் செயல்படாமல் உள்ளன.

பாஜக வன்முறையை தூண்டுகிறது எனக் கூறும் தினகரன், கங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைத்து அவரது சாத்வீகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.