ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு  செய்து வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. ‘அம்மா டி.வி.’ என்ற பெயரில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டி.வி. தொடங்கப்பட இருக்கிறது.

இதற்கான இடம் நுங்கம்பாக்கத்தில்  தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “சிறிய கட்சிகள் எல்லாம் டி.வி. சேனல் நடத்துகின்றன. இதனால் நாங்கள் டெலிவிஷன் சேனல் தொடங்குவதில் என்ன தவறு” என்றார்.

அரசு கேபிள் டி.வி. மூலம்தான் டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஓ.பி.எஸ். அணியின் புதிய சேனலை ஒளிபரப்ப அனுமதிப்பில் சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.