ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தங்களது அணியை பலப்படுத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு

சென்னை கொட்டிவாக்கத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது அணியை பலப்படுத்துவதற்காக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
அ.தி.மு.க. அணிகள்
அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற மற்றொரு அணியும் தற்போது செயல்பட்டு வருகிறது. தேர்தல் கமி‌ஷனில் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க இந்த 2 அணிகளும் இணைய முடிவு செய்தது.
2 அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் குழுவும், அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.
2 நிபந்தனைகள்
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அணிகள் இணைவதற்கு முன்பு சசிகலாவின் குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என 2 நிபந்தனைகளை விதித்தனர். ஆனால் அ.தி.மு.க. (அம்மா) அணியினர் நிபந்தனைகள் விதிப்பதை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். நாங்கள் திறந்த மனதோடு பேச தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இருப்பினும் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1–ந்தேதி சென்னை சாலிகிராமத்தில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஆணித்தரமாக கூறினார்.
ஜெயலலிதா படம்
இந்தநிலையில், தற்போது இரு அணியினரும் பேச்சுவார்த்தையை விலக்கிவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. (அம்மா) அணியினர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவின் படத்தை வைத்து தொண்டர்களை ஈர்க்கின்றனர்.
மேலும், தங்கள் வசம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் இருக்கின்றார்கள் என்றும் கூறி வருகின்றனர். மற்றொரு புறம் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் புதிய யுக்தியை கையாள உள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்
தற்போது அதனுடன் சேர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து பேச சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அப்போது ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாகவும், இரு அணிகள் இணைவது தொடர்பாக தொண்டர்கள், நிர்வாகிகளுடன் கருத்து கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
ஆலோசனை கூட்டம்
இதுதொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்துக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.பாண்டியராஜன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்து பேசப்பட்டது.