- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா திடீர் தயக்கம் காட்டுகிறார். ஆர்.கே.நகர் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறியதுடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், பரபரப்பான புகாரை தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது ஓ.பன்னீர் செல்வத்தை, தீபா ஜெயலலிதா சமாதியில் வைத்து நேரில் சந்தித்தார். பின்னர் அவரது இல்லத்துக்கும் சென்றார்.அப்போது பேட்டி அளித்த தீபா அ.தி.மு.க.வில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என்று கூறினார். இதனால் அரசியல் களத்தில் இருவர் மீதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று கூறும் போது, “தீபாவின் நாளைய நிகழ்ச்சி நிரலில் ஆர்.கே.நகர் பொதுக்கூட்டம் எதுவும் இதுவரை இல்லை” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நாளை (24-ந்தேதி) காலையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தீபா மலர் தூவி மரியாதை செலுத்து கிறார். பின்னர் வீட்டுக்கு திரும்பும் அவர் வீட்டு அருகே கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு கேக் வெட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். அதன்பிறகு தீபா தனது முடிவை அறிவிக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் தினமும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகிறார்கள். நாளை ஜெயலலிதா பிறந்த நாள் வருவதையொட்டி இன்றும் அவரது வீட்டின் முன்பு நிர்வாகிகள் கூடி இருந்தனர்.அரசியல் களத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட்டால் தீபாவின் தனித்துவம் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் அவரிடம் எடுத்து கூறினர்.
இதன் காரணமாகவே நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் பங்கேற்பதற்கு தீபா தயக்கம் காட்டுகிறார்.எனவே நாளைய ஆர்.கே.நிகழ்ச்சியை அவர் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தீபாவை சந்திப்பதற்காக இன்று வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்களுடன் தீபாவின் கணவர் மாதவன் ஆலோசனை நடத்தினார். வெளியூர்களில் இருந்து வந்திருந்த மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்தும் அவர் கருத்துக்களை கேட்டார்.
அப்போது அவரிடம் தீபா பேரவையினர் எந்த சூழ்நிலையிலும் நாம் நமது தனித்துவத்தை இழந்து விடக்கூடாது என்று தெரிவித்தனர். தீபாவின் தலைமையை ஏற்பவர்களை மட்டுமே நாம் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபா செயல்படுவதற்கும் நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீபா என்ன முடிவு எடுப்பார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதற்கு நாளை விடை கிடைத்து விடும். தீபா நாளை என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை அறிய தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.