ஓரிரு நாளில் புதிய கட்சி-தீபாவை முதல்வராக்குவதே நோக்கம்: கணவர் மாதவன் திடீர் பல்டி

புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த தீபாவின் கணவர் மாதவன் தீபாவை முதலமைச்சராக்குவதே அந்த கட்சியின் நோக்கம் என நேற்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 17-ம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தீபா தனித்து செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், தொண்டர்கள் விருப்பப்படி தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த அவர், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை சிஐடி காலனியில் தனது ஆதரவாளர்களுடன் மாதவன் தனியாக ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்டமாக மதுரவாயலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று கூட்டத்தை கூட்டி புதிய கட்சி குறித்த அறிவிப்பை மாதவன் வெளியிடுவதாக இருந்தார். ஆனால், அங்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவேற்காட்டில் நேற்று தனது ஆதரவாளர்களிடம் மாதவன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “புதிய கட்சியை ஓரிரு நாட்களில் தொடங்குவேன். தீபாவை முதலமைச்சராக்குவதே அந்த கட்சியின் நோக்கம். அதற்காக பணிகளை இனி வரும் நாள்களில் மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

ஆதரவாளர்கள் அதிருப்தி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித்து செயல்படுவேன் என்று கூறிய மாதவன், நேற்று திடீரென தனது கருத்தை மாற்றிக்கொண்டதால் மாதவனின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாதவனின் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, “தீபாவும், அவரது கணவரும் உறுதியான நிலைப்பாடு எடுப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இருவருமே முன்னுக்குப் பின் முரணாகவும், முடிவுகளை மாற்றியும் வருவதால் ஆரம்பம் முதல் உடனிருக்கும் தொண்டர்களாகிய எங்களை ஏமாற்றி வருகின்றனர் என்றே தோன்றுகிறது. மாதவன் தனியே கட்சியை நடத்துவது சிரமம் என உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறோம். ஏற்கெனவே பலர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் பேரவை காலியாகிவிடும்” என்றனர்

மாதவனால் பாதிப்பில்லை

இதற்கிடையே ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என அறிவித்த தீபா தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தீபா தேர்தல் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார். இதுகுறித்து தீபா பேரவை நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கடந்த 17-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய மாதவன் இதுவரை வீடு திரும்பவில்லை. வெளியே ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். மாதவன் பிரிந்து சென்றதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆர்.கே.நகரில் தீபா போட்டியிடுவது உறுதி என்பதால் அங்கு பணியாற்ற தேர்தல் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தீபா தனது பிரச்சாரத்தை தொடங்குவார்” என்றார்.