ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருவதால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இரு அணிகள் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு பல நாட்களாகிவிட்டன. ஆனால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது மட்டுமே நடக்கிறது. இரு தரப்புக்கும் இடையில் கருத்து மோதல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ எஸ்.செம்மலை பேசும் போது, எதிரணியில் இருந்து 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். “நாங்கள் வந்துவிடு கிறோம். இந்த ஆட்சியை கலைத்துவிடாதீர்கள். ஓபிஎஸ் முதல்வராக இருக்கட்டும் என் கின்றனர்” என்றார்.
இந்நிலையில், நேற்று காலை மெரினா நீச்சல்குளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிதி யமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக கேட்டபோது, ‘‘நாங்கள் கட்சியிலும், ஆட்சியிலும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஜெயலலிதா ஆட்சி 2021 வரையில் தொடரும். அவர்களுடன் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம். அங்கிருப்பவர்கள் தான் இங்கு வர நிறைய முயற்சி எடுத்து வருகின்றனர். அதுவும் விரைவில் நடக்க உள்ளது. அதை தடுக்க அவர் அவ்வாறு பேசியிருக்கலாம்” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்த ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘எங்கள் அணியில் அவ்வளவு பேர் இருப்பதாக அவர் கூறியிருப்பதற்கு நன்றி” என்றார்.
சேகர் ரெட்டியுடன் தொடர்பு
இதற்கிடையில், சேகர் ரெட்டியுடன் ஓபிஎஸ்-க்கு உள்ள தொடர்பு என்ன என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர், ‘‘14 பேர் மீது எழுப்பப்பட்டுள்ள ஊழல் புகாருக்கு முதலில் அவர் (ஓ.பன்னீர்செல்வம்) பதில் சொல்லட்டும். விசாரணை கமிஷன் வையுங்கள் நான் சந்திக்க தயார் என்று அவர் சொல்வாரா?. சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தியது யார்? ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போதுதான் சேகர் ரெட்டிக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உறுப்பினராக போட்டது யார்? சேகர் ரெட்டியும், ஓ.பன்னீர்செல்வமும் சினிமாவில் நம்பியாரும், அசோகனும் போல புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்களே. இதுவரை ஏன் அவரிடம் விசாரிக்கவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இரு அணியினரின் இது போன்ற நடவடிக்கைகள் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தம்பிதுரை விமான நிலையத்தில் பேசும் போது, ‘‘இரு அணிகள் இடையில் சுமூக பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும். இரு அணிகள் இணைப்பும் சாத்தியம்தான். தேர்தலை எதிர் கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவினருக்கு கற்றுத்தந்த பாடம். அதன் அடிப்படையில்தான் ஓபிஎஸ் தேர்தல் பற்றி கூறியிருப் பார்” என்றார்.