ஓபிஎஸ் அணி சார்பில் ஜூன் 8, 9-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் தீவிரம்

அதிமுக அணிகள் இணைப்புக்கான பணிகள் நடக்கும் நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் கொண் டாட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் கட்சி, சின் னத்தை மீட்க முடியும் என்பதால் அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்கிடையே, ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தபடி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.

விழா நடத்துவதற்காக திரு வான்மியூரில் உள்ள தனியார் மருத் துவ பல்கலைக்கழகத்துக்கு சொந்த மான இடம், கந்தன்சாவடி பகுதியில் உள்ள இடம் என சில இடங்களை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது கே.பி.முனுசாமி கூறும்போது, ‘‘எம்ஜிஆர் நூற் றாண்டு விழாவைக் கொண்டாடுவ தற்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, அதற் கான இடம் தேர்வு செய்ய வந்தோம்’’ என்றார். முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறும்போது, ‘‘ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக் கும். இதில் 4 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்’’ என்றார்.

கட்சி, சின்னம் தொடர்பாக கூடு தல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அதிமுகவின் இரு அணிகளுக் கும் ஜூன் 16-ம் தேதி வரை தேர் தல் ஆணையம் அவகாசம் அளித் துள்ளது. ஒருபுறம் இணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு தயாரானாலும், மற்றொரு புறம் இரு அணியினரும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி, அதன்மூலம் தங்கள் பலத்தை நிரூபிக்க ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

திருவான்மியூரில் ஓபிஎஸ் அணியினர் நேற்று பார்வையிட்ட இடம், கடந்த 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.