ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஒரே நேரத்தில் 8,500 பேரை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக, கடந்த மாதம் 23 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அவர், அங்கு நடைபெற்று வரும் தனது கட்சிக்கான இணையதளப் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்.

அமெரிக்காவில் இருந்து வருகிற 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை திரும்புகிறார் ரஜினி. ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில், ரஜினி கலந்து கொள்கிறார்.

அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்கிறார்கள். முதல்கட்டமாக, தன்னுடைய கட்சிக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ரஜினி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அத்துடன், மே 25 ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.