ஒரு வாரத்திற்குள் வழக்கு: அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன் மீது ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்துள்ளார்.

அவர் பேசுகையில், காற்றாலை மின்சாரத்தில் முறைகேடு நடந்ததாக நான் கூறிய குற்றச்சாட்டிற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. நான் ஆதாரம் இல்லாமல் பேசுவதாக கூறுகிறார். ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. ஆதாரத்துடன் தான் பேசுகிறேன்.

அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறாக பேசியதற்காக என் மீது வழக்கு தொடர போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் இதுவரை வழக்கு தொடரவில்லை.
நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்றால் அமைச்சர் தங்கமணி ஒரு வாரத்திற்குள் என் மீது வழக்கு தொடர வேண்டும். இல்லை என்றால் நான் அவர் மீது வழக்கு தொடர்வேன்.

குட்கா விவகாரத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்ததால் தற்போது சிபிஐ வரை சென்று, சோதனை நடத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டிஜிபி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடந்த பிறகும் இன்னும் வெட்கமின்றி அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.