ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட வேண்டுமென்றால் 7 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.

அது தொடர்பாக புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு வருகிறார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதிக்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியேற்பு விழா, அரசு செலவில் நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளையிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலம், மிக பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம்.

இதற்காக, பதவியேற்பு விழா கமிட்டி, நிதி திரட்ட துவங்கியுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு பின், புதிய ஜனாதிபதியான டிரம்புடன் சேர்ந்து, இரவு விருந்து சாப்பிட, ஏழு கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, துணை அதிபர், மற்ற அமைச்சர்கள் உள்ளிட்டோருடன், சேர்ந்து, இரவு உணவு சாப்பிட, 20 லட்சம் ரூபாய் முதல், ஏழு கோடி ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டிரம்புடன் சேர்ந்து உணவு சாப்பிட, தற்போது, வசதிபடைத்த, ஏழு தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா இரண்டாம்முறை பதவியேற்றபோது வசூலான, 310 கோடி ரூபாய் சாதனையை முறியடிக்க, டிரம்ப் ஆதரவாளர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.