ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 7 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டது.

52-வது லீக் ஆட்டம்

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்- ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.

அதிர்ச்சி தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கருண்நாயர் ஆகியோர் களம் இறங்கினார்கள். டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை (2 ரன்) பென் ஸ்டோக்ஸ் நேரடியாக ஸ்டம்பை குறி வைத்து தகர்த்து ‘ரன்-அவுட்’ செய்து அசத்தினார். அடுத்து களம் கண்ட ஸ்ரேயாஸ் அய்யர் (3 ரன்) உனட்கட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2.1 ஓவர்களில் 9 ரன்னுக்கு டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், கருண் நாயருடன் ஜோடி சேர்ந்தார். 4-வது ஓவரில் கருண்நாயர் அணியின் முதல் பவுண்டரியை விளாசினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஓவரில் கருண்நாயர் 3 பவுண்டரியும், ஷர்துல் தாகூர் வீசிய ஒரு ஓவரில் ரிஷாப் பான்ட் 3 பவுண்டரி விரட்டியும் கலக்கினார் கள். இதனால் அணியின் ரன்விகிதம் சரிவில் இருந்து மீண்டது. 5.4 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்னை எட்டியது.

கருண்நாயர் 64 ரன்கள்

அணியின் ஸ்கோர் 8.5 ஓவர்களில் 83 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய ரிஷாப் பான்ட் (36 ரன்கள், 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆடம் ஜம்பா பந்து வீச்சில் லாங் ஆன் திசையில் நின்ற டேனியல் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து சாமுவேல்ஸ், கருண்நாயருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். 12 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்னை தொட்டது.

சாமுவேல்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் டேனியல் கிறிஸ்டியன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் 3 ரன்னிலும், கம்மின்ஸ் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய கருண்நாயர் (64 ரன்கள், 45 பந்துகளில் 9 பவுண்டரியுடன்) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் உனட்கட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

டெல்லி அணி வெற்றி

அடுத்து முகமது ஷமியை (2 ரன்) பென்ஸ்டோக்ஸ் பவுண்டரி எல்லையில் அபாரமாக செயல்பட்டு கேட்ச் செய்து ஆட்டம் இழக்க வைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அமித் மிஸ்ரா 13 ரன்னுடனும், சபாஷ் நதீம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே அணியில் கேப்டன் ஸ்டீவன் சுமித் 38 ரன்னும் (32 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), மனோஜ்திவாரி 60 ரன்னும் (45 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன்) பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னும் (25 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். டெல்லி அணி வீரர் கருண்நாயர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5-வது தோல்வி

13-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. 13-வது ஆட்டத்தில் விளையாடிய புனே அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆடிய புனே அணி தோல்வி கண்டதால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்திடம், ஐதராபாத் அணி தோற்றால் புனே அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை ஐதராபாத் வெல்லும் பட்சத்தில் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். அப்படி ஒரு நிலை வரும்போது புனே அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாபை வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.