ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

முதலாவது தகுதி சுற்று

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ‘கிளைமாக்சை’ எட்டி விட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சந்தித்தது.

புனே அணியில் நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக பெர்குசன் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் திரும்பினார்கள். நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

அதிர்ச்சி தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ராகுல் திரிபாதி ஆகியோர் களம் இறங்கினார்கள். புனே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. திரிபாதி ரன் எதுவும் எடுக்காமல் மெக்லெனஹான் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட கேப்டன் ஸ்டீவன் சுமித் (1 ரன்), மலிங்கா பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். 9 ரன்னுக்கு புனே அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி, ரஹானேவுடன் இணைந்தார். பவர் பிளேயில் (முதல் 6 ஓவரில்) புனே அணி 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் சேர்த்தது. 8.2 ஓவர்களில் புனே அணி 50 ரன்னை தொட்டது. அடித்து ஆடிய ரஹானே 39 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை எட்டினார்.

மனோஜ்திவாரி 58 ரன்கள்

அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய ரஹானே (56 ரன்கள், 43 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கரண்ஷர்மா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து டோனி, மனோஜ் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். முதலில் நிதானம் காட்டிய டோனி கடைசி 2 ஓவரில் அதிரடியாக விளாசினார். மெக்லெனஹான் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சரும், ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சரும் தூக்கி அசத்தினார். மனோஜ் திவாரி (58 ரன்கள், 48 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) கடைசி பந்தில் ஜஸ்பிரித் பும்ராவால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டியில் புனே அணி

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் புனே அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டோனி 26 பந்துகளில் 5 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி 3 ஓவரில் புனே அணி 48 ரன்கள் திரட்டியது. மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான், மலிங்கா, கரண்ஷர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. இதனால் புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணியில் அதிகபட்சமாக பார்த்தீவ் பட்டேல் 52 ரன்கள் (40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். புனே அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டும், உனட்கட், பெர்குசன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். புனே அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2-வது தகுதி சுற்று

தோல்வி கண்ட மும்பை அணி பெங்களூருவில் 19-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.