ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்குகாலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியாஆதரவுஅளிக்க கூடாது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியாஆதரவு அளிக்க கூடாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சென்னையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கானதும் நீதிக்குமான போராட்டம் குறித்த சமகால நிலைவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றது.
இணைய வழி காணொளிப் பரிவர்த்னை வழியே நியுயோர்க்கில் இருந்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு சிறிய மண்டபம் ஒன்றில் காத்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
“ஐ.நா தீர்மானம் முன்மொழிந்த காரியங்களை கடந்த 18 மாதகாலத்தில் நிறைவேற்றுவதாக ஒத்துக் கொண்ட இலங்கை அரசாங்கம், எதனையும் செய்து முடிக்கவில்லை என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் குற்றம்சாட்டினார். இந்நிலையில், மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் நீட்டித்தால் எதுவும் நடக்காது என்பதால், இந்திய அரசு இலங்கைஅரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும், இது தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அழுத்தம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.சென்னையில் இடம்பெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமைமையம் ஏற்பாடு செய்திருந்ததோடு, தோழமை மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அவர்களும் ஊடகங்களுக்கு கருத்துரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது