ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்

பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி பேசியதாவது: அரசு திட்ட பயனாளிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம், திட்டத்தின் பயன்கள் மற்றும் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உழைத்து வருகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், நாங்கள், சமூகம், பொருளாதாரம், ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்கிறோம். இதன் மூலம், முன்னரை விட தற்போது அதிகம் பேர் பயனடைந்துள்ளனர்.

குறைந்த விலையில் அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சேரி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்காக குடியிருப்புகள் கட்டி கொடுத்துள்ளோம். அனைவருக்கும் மின்சாரம், குடிநீருடன் வீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ஜ., ஆட்சியில் ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.50 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளோம். இதில் 7 லட்சம் வீடுகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டுள்ளன. 1 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.