ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

டெல்லி அமலாக்கப்பிரிவு கூடுதல் நீதிபதி ரூபி அல்கா குப்தா முன் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், அவர் குற்றம்சாட்டுவோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

கார்த்தி சிதம்பரம் தவிர்த்து, தனியார் நிறுவனமான அட்வான்ட்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டன்சி நிறுவனம், அதன் இயக்குநர் பத்மா பாஸ்கரரமணா, ரவி விஸ்வநாதன், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ், அதன் இயக்குநர் அண்ணாமலை பழனியப்பா ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் பிரிவு4-ன்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கப்பிரிவு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் நிதிஷ் ராணா, என்.கே.மாத்தா ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள். நீதிபதி ரூபி அல்கா குப்தாவிடம் அவர்கள் கூறுகையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்தனர். இந்த வழக்கு ஜூலை 4-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.3 ஆயிரத்து 500 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் நிதி நிறுவன முறைகேட்டு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து அது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அதிரடியாக முடக்கியது. இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் தர மறுத்து ஜூலை 10ம் தேதி வரை கார்த்தியை கைது செய்ய தடை விதித்துக் கடந்த மாதம் 3ம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.