ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

டெல்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வலியுறுத்தினார் என்பது அடிப்படை வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் புகார்.

இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி மேக்சிஸ் நிறுவனமானது இந்திய நிறுவன்மான ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கியது; இதற்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் உடந்தை என புகார் கூறி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. அப்போது மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களும் ஆதாயமடைந்தன என்பதும் சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால குற்றச்சாட்டு. இதனிடையே ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடைபெறுவது என்பதே மிகப் பெரிய வெற்றி. இந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறைக்குப் போகும் நேரம் வந்துவிட்டது என கூறினார்.