ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியாரை மீட்க உரிய நடவடிக்கை: சுஷ்மா உறுதி

போர் பதற்றம் நிலவும் ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட கேரளாவைச் சேர்ந்த கிறிஸ் தவ பாதிரியார் தாமஸ் உழுன்ன லிலை மீட்க அனைத்து நடவடிக் கையும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதாவது:

தன்னைத் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிரியார் தாமஸ் பேசுவது போன்ற வீடியோவை பார்த்தேன். அவர் ஒரு இந்தியர், ஒவ்வொரு இந்தியரின் உயிரும் மிகவும் விலைமதிப்பற்றவை ஆகும். எனவே, அவரைப் பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் பிரச்சினை யில் சிக்கித் தவிக்கும் இந்தியர் களுக்கு மத்திய அரசு தேவையான உதவியை செய்து வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமார் மற்றும் ஜுடித் டிசவுசா ஆகிய இருவரையும் மீட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் தாமஸ். இந்நிலையில், தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் போப் பிரான்சிஸ் உட்பட அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாமஸ் பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், அவர் மேலும் கூறும்போது, “நான் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால், என்னை அவர்கள் மீட்டிருப்பார் கள். ஆனால் இந்தியன் என்பதால், என்னுடைய உயிரை அரசு பெரிதாக கருதவில்லை” என்றார்.

அபுதாபியில் உள்ள உறவினர் ஒருவரின் மூலம் இந்த வீடியோ தங்களுக்கு வழங்கப்பட்டதாக பாதிரியாரின் குடும்பத்தார் தெரி வித்தனர்.