ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டில் ரஜினிகாந்த் தனிக்கட்சி? பரபரப்பு தகவல்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இறுதியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். கட்சி பெயரை அறிவிக்காமல் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதன் பெயரிலேயே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கட்சியை எப்போது அறிவிப்பார் என்று ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். இதனால் கட்சி பெயரை அறிவிப்பதில் அவர் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.

2 கோடி உறுப்பினர்கள்

தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பு 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து அடித்தளத்தை வலுவாக்குவது ரஜினிகாந்தின் திட்டமாக உள்ளது என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். தற்போது தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கையில் ரசிகர் மன்றத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உறுப்பினராக சேர வருபவர்களிடம் இருந்து புகைப்படங்கள் சேகரிக்கப்படுகின்றன. பெயர், முகவரி, தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்களையும் கேட்டு பதிவு செய்கிறார்கள். உறுப்பினராக சேரும் சில பெண்கள் புகைப்படங்களையும், போன் நம்பரையும் கொடுக்க தயங்குகிறார்கள்.

பெண் உறுப்பினர்கள்

அப்படிப்பட்ட பெண்களிடம் புகைப்படங்களை வற்புறுத்தி கேட்க வேண்டாம் என்றும், அவர்களின் கணவர், அண்ணன், தம்பி ஆகியோரில் யாராவது ஒருவரது போன் நம்பரை வாங்கி பதிவு செய்யலாம் என்றும் ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார். புகைப்படம் கொடுக்காத பெண்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் அட்டையில் அவர்களின் படங்கள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த மன்ற பொறுப்பாளர் சுதாகர் தலைமையில் மேலிட குழு ஒன்றையும் நியமித்து தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் அனுப்பி வைத்து இருக்கிறார். இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டில் தனிக்கட்சி

உறுப்பினர் சேர்ப்பு பணி முடிந்ததும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்கிறார். நிர்வாகிகள் தேர்வில் ரஜினிகாந்த் நேரடியாகவே ஈடுபடுகிறார். குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு பதவி கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த பணிகளை முடித்த பிறகு கட்சி தொடங்குகிறார்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி ரசிகர்கள் மாநாட்டை கூட்டி தனிக்கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நாளில் கட்சியின் கொடி, சின்னம், கொள்கை திட்டங்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் போன்றவற்றையும் வெளியிடுகிறார்.