எழுப்பூர் விடுதியில் வருமான வரிசோதனையில் ரூ.5000 பரிசுப்பொருள் டோக்கன்கள் 850 பறிமுதல்!

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள்.

தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர்.
இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி கள் அந்த லாட்ஜில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்ற போது அ.தி.மு.க. வினர் பலர் லாட்ஜில் இருந்து வெளியேறினர். ஆனால் யாரையும் வெளியில் விடாமல் சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர் அவர்களின் கார்களில் சோதனை நடத்தினர்.

இருக்கைகள் அனைத்தையும் தூக்கி பார்த்து பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

ஒரு சிலர் சொந்த ஊர்களுக்கு செல்லவும் திட்டமிட்டு கார்களில் புறப்பட்டனர். அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தபட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அ.தி.மு.க.வினர் திண்டாடினர். பின்னர் லாட்ஜில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியிருந்த அ.தி.மு.க.வினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்பதை கண்டு பிடிப்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எழும்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள கென்னத் லேன் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். லாட்ஜிகள் அதிகம் உள்ள இந்த சாலையில் எப்போதும் அரசியல் கட்சியினரை பார்க்க முடியும். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இங்குள்ள லாட்ஜிகளிலேயே அதிகமாக தங்குவார்கள். அந்த அடிப்படையில் தான் நியூ லட்சுமி லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எழும்பூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

சோதனையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் முகமது வீட்டில் இருந்து ரூ.2.25  கோடி ரொக்கப்பணமும், எழும்பூர் விடுதியில் இருந்து ரூ.5 ஆயிரம் பரிசு பொருட்களுக்கான 850 டோக்கன் உள்பட முக்கிய ஆவணங்களும் சிக்கின. அதேபோல், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணமும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.