எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டொனால்டு டிரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர், அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட திட்டங்களில் நடப்பு வாரத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், சில முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயருவதற்கு தற்காலிக தடைவிதிக்கவும் டிரம்ப் உத்தரவிட உள்ளதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேச பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவற்றில் ஒன்று மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்பதாகும். தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக இதை டிரம்ப் கூறி வந்த நிலையில், இந்த உத்தரவை பிறப்பிக்க போவதாக நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன், உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுவதற்கும் தடை உத்தரவை தற்காலிகமாகவாது பிறப்பிக்க கூடும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  தனது டுவிட்டரில்  டிரம்ப் நாளை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் திட்டத்துக்கு கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளார்.