எல்லா குற்றம் சாட்டப்பட்ட 32 பெரும் நிரபராதிகளே – பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.,வின் மூத்த நிர்வாகிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் கருத்து பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டிங் ஆனது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்வானி உள்ளிட்டோரை இந்த வழக்குகளில் இருந்து நீதிமன்றம் விடுவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்கும் படி, 2017ல் உத்தரவிட்டது. மேலும் வழக்கை, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.

இந்த வழக்கில் இன்று(செப்., 30) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திட்டமிட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரத்துடன் சி.பி.ஐ., நிரூபிக்கவில்லை. ஆகவே குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

இதையடுத்து இந்த தீர்ப்பு தேசிய அளவில் எதிரொலித்தது. தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூகவைலதளமான டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டனர். “வாய்மையே வெல்லும், நீதி வென்றது, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, எதிர்பார்த்த தீர்ப்பு, ராம ஜென்ம பூமி” என பலரும் வரவேற்று கருத்துக்களை பதிவிட்டனர்.

மற்றொருபுறம், “நீதித்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது”, “இந்திய நீதி துறையின் மீதான கருப்பு நாள் இன்று”, “பல்லாண்டு வாழ்க இந்திய நீதித்துறை”, “பாபர் மசூதி நிலநடுக்கத்தால் இடிந்தது”, “அந்த சம்பவத்தின் போது எவ்வளவு போட்டோக்கள், வீடியோக்கள் ஆதாரமாக கிடைத்தன. ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை என நீதிமன்றம் கூறுகிறது. நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விட்டது” என பலரும் எதிர்கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இதனால் டுவிட்டரில் இந்த விவகாரம் #BabriDemolitionCase, #BabriMasjidDemolitionCase, #Advani, #jai shri ram, #Indian Judiciary உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டாக்குகளில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.