எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்டு

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் அண்மை செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம்.

கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த வாழ்வில், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். இதுதான் எனக்கு அடிப்படை வருமானமாக இருந்தது. தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது.

எனது வாழ்க்கையை நிர்மாணிக்க, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிதான் ஆதாரமாக உள்ளது. பல முறை கமல்ஹாசனிடமும், அவரது நிறுவனத்திடமிருந்தும் அதைக் கேட்டுப்பெற முயற்சித்தேன்.

அப்படி இருந்தும், இன்னும் எனக்கு சம்பள பாக்கி வர வேண்டியுள்ளது. கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றங்களும், சுயமரியாதையை இழக்கக்கூடாது என நான் முடிவெடுத்ததும்தான் நாங் கள் பிரியக் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.