எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் சுமந்திரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கும் என்கிறார் தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட மாட்டார் என்றும், சுமந்திரனுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் சுமந்திரன் அமைச்சரவையையும் அலங்கரிப்பார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தேசிய பட்டியல் வழங்கப்படும் என்பதாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.அவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் முயற்சிக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க சுமந்திரன் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமே கடந்த தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களைச் செய்தார் என்றும் அதனைத் தொடர்ந்து ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்த சுமந்;திரனை சம்பந்தனுக்கு அறிமுகம் செய்த ரணில் விக்கிரமசிங்க அவருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் வேட்பாளர் இடம் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதால், திரு சம்பந்தன் அவ்வாறு வழங்கினார் என்றும் கனடா உதயன் சில வருடங்களுக்கு முன்னர் செய்தி ஒன்றைப் பிரசுரித்திருந்தமையை நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.