எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்துபோன அ.தி.மு.க.வில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட 8 பேர் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குணசேகர், பரமேஸ்வரி, சத்யா உள்பட சுமார் 15 பேர் சென்று சந்தித்து பேசினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியில் போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், காமராஜ், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் சில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

அதன்பிறகு, வெளியே வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற ஜூன் மாதத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் எழுச்சியோடு கொண்டாடப்படும். தமிழக அரசு சார்பாகவும், அ.தி.மு.க. சார்பாகவும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுதொடர்பாகத்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினோம்.

கூட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பாக நடத்தவேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கிராமங்கள்தோறும், பள்ளிகள்தோறும் விமரிசையாக நடத்தப்படும். பள்ளிகளில் கட்டுரைப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்குரிய பரிசுகள் அரசின் சார்பில் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் நடைபெறும் விழாவில் சிறப்பு ஊர்திகள் பங்கேற்கும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, எம்.ஜி.ஆரின் சாதனைகள் மற்றும் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படும். நூற்றாண்டு விழாவின் நிறைவாக ஒரு கூட்டம் நடைபெறும்.
அதில் கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும். மேலும், தமிழக அமைச்சர்களும் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்–மந்திரிகளும், மந்திரிகளும் இந்த விழாவில் பங்கேற்பதற்கு வாய்ப்பு உள்ளது.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பின்னர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும். அனேகமாக ஜூன் மாதம் இறுதியில் மதுரையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், ‘‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை என்ன திட்டத்துடன் சந்திக்கிறார்?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தம்பிதுரை, ‘‘பிரதமரை சந்திக்க இருப்பது குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றார்.

காரணத்தை எம்.எல்.ஏ.க்களே விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் நேற்று, ‘‘அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து சந்தித்து வருகிறார்களே?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சரை சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சந்திப்புக்கான காரணம் குறித்து அவர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தான் விளக்க வேண்டும்’’ என்றார்.