- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு – திமுகவை விட்டு விலகுகிறதா திருமாவளவன் விசிக?
முதல் அமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர். வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரது கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சரி, அவரே முதல்வர். அந்த அடிப்படையில்தான் அவரை சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். திமுக கூட, ஏதாவது மாநிலம் சார்ந்த கோரிக்கையை வைக்க வேண்டுமானால், முதல்வரை சந்தித்து வழங்குவதை நாம் பார்க்கிறோம். நிவாரண நிதி வழங்கும்போது கூட முதல்வரைதான் அந்த கட்சியினர் சந்தித்து வழங்குகிறார்கள். முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர் பொதுவானவர்.
ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மரபு உருவாகியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள், அதிமுக கூட்டணியினரோடு பேசக்கூடாது. அதுபோல அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுக கூட்டணியில் இருப்பவர்களோடு பேசக்கூடாது, பழகக்கூடாது என்று வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த மரபை திருமாவளவன் உடைத்து வருகிறான்.
நான் திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன். இருப்பேன். ஆனாலும், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை சார்ந்த தலைவர்களை நான் சந்திப்பதில் தயக்கம் காட்டியதில்லை. அவர்களுடன் ஆன நட்பு பாதிக்கப்படாத வகையில், அரசியல் விமர்சனங்களைக் கடந்து உறவாடுகிறேன். ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அப்போது திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட, முதல் நபராக அவரை நான் சந்திக்கச் சென்றேன். ஆகவே, ஒரு கூட்டணியில் இருந்தால் மற்ற கூட்டணியில் உள்ளவர்களுடன் பேசவே கூடாது என்றோ, அப்படி பேசினால், அணி மாறி விடுவேன் என்றோ நினைப்பது தவறான மதிப்பீடு.
துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும்! தலித்/பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் (கல்வி உதவித் தொகை)வழங்க வேண்டும்!
முதலமைச்சரை சந்தித்து விட்டதால், அணி மாறுவேன் என எதிர்பார்ப்பு ஏற்படுவது, அவதூறு பரப்புவது, தமிழகத்தை பொருத்தவரை வாடிக்கையாகி விட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை. நான் திமுக கூட்டணியில் எந்த அளவுக்கு உறுதிப்பாட்டுடன் இருக்கிறேன் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே நன்றாக தெரியும். நான் அவரது கூட்டணிக்கு வந்து விட வேண்டும் என என்னிடம் பேசும் அளவுக்கு அவரும் நெறி பிறழும் அரசியலில் ஈடுபடக் கூடியவர் கிடையாது. நாங்களும் அந்த நோக்கத்துடன் அவரை சந்திக்கவில்லை.
முதல்வர் என்ற முறையில், அவரது பார்வைக்கு சில விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு தேவை என்று கோரினோம். கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் அதிகமான தலைவர் பதவி உண்டு என்றால், அதற்கு சமமான துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு தேவை. அதில் ஒருவர் கூட தலித், பழங்குடியினர் வரமுடியாத நிலை இருப்பதால் அந்த கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தோம்.
இரண்டாவதாக, தலித், பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் எனப்படும் மத்திய அரசு வழங்கக் கூடிய கல்விக்கான ஊக்கத்தொகை திடீரென பாதிக்கு பாதியாக குறைத்து விட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசும் தலித், பழங்குடியினருக்கு வழங்கிய நிதியை நிறுத்தி விட்டது. மத்திய அரசு நிதியை நிறுத்தி விட்டாலும் பரவாயில்லை, தலித்துகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதியைப் பெற்று நிதியை வழங்கினால், பள்ளிப்படிப்பை பொருளாதார வசதியில்லாத காரணத்தால் பாதியிலேயே நிறுத்தும் நிலை தவிர்க்கப்படும் என்பதை முதல்வரிடம் எடுத்துரைத்தோம்.
மற்றொரு விஷயமாக, சென்னை மாநகராட்சியை தனித்தொகுதி ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சென்னை மாநகராட்சியில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் யாரும் கிடையாது. ஆனாலும், அந்த கோரிக்கையை முன்வைக்க முக்கிய காரணம் உள்ளது. தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுந்தது முதலே அதை தனித் தொகுதியாக ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
எனது பெயரிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரியும், சென்னை மாநகராட்சியை தனித்தொகுயாக அறிவிக்க உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றம் அந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைத்தது. ஆக, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலே நடக்காது என்று கருதப்பட்ட நேரத்தில் தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், அது உறுதி என்று தெரிந்தவுடன்தான் தமிழக முதல்வரிடம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை வைத்தோம்.
அப்போது முதலமைச்சர், ஏற்கெனவே, தூத்துக்குடி, வேலூர் ஆகியவற்றை தனித்தொகுதி ஆக தேர்வு செய்து விட்டோம். தூத்துக்குடி தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி என்றும், வேலூர், தாழ்த்தப்பட்டோருக்கான பெண்கள் தொகுதி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கொடுத்தார். இதுதான் எதேச்சையாக நடந்தது.
ஆனால், திமுக அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எப்படியாவது தடுக்கும் நோக்குடன் அந்த கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை. ஒருவேளை அந்த கோரிக்கையை வைத்த நிலையில், தமிழக அரசு சென்னையை தனித்தொகுதியாக அறிவித்தால் கூட, திமுகதான் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தப்போகிறது.
அதை நாங்கள் ஆதரிக்கத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, விடுதலை சிறுத்தைகள், கையில் ஒரு வேட்பாளரை வைத்துக் கொண்டு இந்த கோரிக்கையை வற்புறுத்தவில்லை. இது வழக்கம் போல தமிழ்நாட்டில் நிலவும் ஒரு ஊகம்தான். எப்போதும் போல விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியிலேயே இடம்பெற்றிக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் அது தொடரும். அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தல்வரையிலும் கூட நாங்கள் இணக்கமாகவே பயணம் செய்வோம்.