ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’ ஒதுக்க, தி.மு.க..,வினரிடம், ரூ.30 லட்சம் பேரம் பேசியது தொடர்பான, ‘ஆடியோ’ வைரலாகியுள்ளது. கட்சிக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி ‘வார்டு’ உறுப்பினர் ‘சீட்’ கூட வாங்க முடியாது என்பது, சமீப கால அரசியலில் எழுதப்படாத விதிமுறையாகி வருகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிக்க, பணம் பேரம் நடந்த ‘ஆடியோ’ சமூகவலை தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆடியோவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆச்சிபட்டி தி.மு.க., பிரமுகரும், மாஜி ஊராட்சி தலைவருமான ஈஸ்வரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஆடியோ’வில், ஒன்றிய செயலாளர் மருதவேல், கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அமைப்பு செயலாளர் பாரதி ஆகியோருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று கூறி, 30 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார். இந்த ஆடியோ, கட்சி தலைமை வரையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆச்சிபட்டி தி.மு.க., நிர்வாகி ஈஸ்வரன் கூறுகையில், ”தனக்கு ‘சீட்’ கொடுக்க, 30 லட்சம் பேசப்பட்டது. தன்னிடம் அவ்வளவு இல்லை என்றதும், எனக்காக கேட்கவில்லை. மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் ஆகியோருக்கு தர வேண்டும் என்றார். அனுமதியில்லாமல் பேட்டி கொடுப்பது கட்சி கட்டுப்பாட்டை மீறியதோடு, கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும். அதனால், அனுமதி கிடைத்ததும் பேட்டி கொடுக்கிறேன்” என்றார். வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் கூறுகையில், ”ஆச்சிபட்டி பெரிய ஊராட்சி; கட்சியில் சீட் கேட்ட நான்கு பேரிடமும், தேர்தல் பிரசார செலவுக்காக, 30 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. எனக்காக பணம் கேட்கவில்லை,” என்றார்.

தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் கூறுகையில், ”தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்பவர்களிடம் நேர்காணல் செய்யும்போது, எவ்வளவு செலவு செய்ய முடியும் என கேட்பது வழக்கம். அதைத்தான் மருதவேல் கேட்டிருப்பார். எனக்காக, பணம் கேட்கவில்லை. ‘சீட்’ கிடைக்காதவர்கள் அதிருப்தியில் செயல்பட்டிருக்கலாம். அதனால், ஆச்சிபட்டியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளர் தோற்றார்,” என்றார். எது எப்படியோ, தி.மு.க.,வில் தேர்தலில் போட்டியிட பணம் கேட்டது மட்டும் உண்மை என்பது தெரியவருகிறது. ஆனால், யாருக்காக பணம் கேட்டார்கள் என்பது, கட்சி விசாரணைக்கு பிறகே தெரியும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.