உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தடுப்பு மருந்து செலுத்தும் பணி தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், உலகில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி வருகிறது.

அதே சமயத்தில் உலகின் பணக்கார நாடுகளுக்கு அதிவேகத்தில் தடுப்பு மருந்துகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு ஏழை நாடுகளை காட்டிலும் 25 மடங்கு அதிவேகமாக தடுப்பு மருந்துகள் சென்று சேர்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் இதுகுறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் உலகின் 154 நாடுகளுக்கு 726 மில்லியன் தடுப்புமருந்து வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
உலகின் 4.3 சதவீத மக்கள் தொகைகொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவில் உலகில் 24 சதவீத தடுப்பு மருந்துகள் அதிவேகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது, இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் நாட்டில் 0.1 சதவீத தடுப்பு மருந்துகளை விநியோகிக்கப்பட்டுள்ளன. பணக்கார நாடுகள் அதிக அளவு தடுப்பு மருந்துகளை விலைகொடுத்து வாங்கி விட்டன. குறிப்பாக அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் 75 சதவீத குடிமக்களுக்கு தடுப்புமருந்து சென்று சேர்ந்துவிடும். அதே சமயத்தில் உலக அளவில் 8 சதவீத மக்கள் தொகைகொண்ட 40 ஏழை நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேருவதில் தாமதம் ஏற்படுகிறது.

உலகின் 18 சதவீத மக்கள் தொகையை கொண்டிருக்கும் மிகப்பெரிய நாடான சீனாவில் உலக அளவில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 20 சதவீத தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு விட்டன. உலகின் பின்தங்கியே கண்டமான ஆப்பிரிக்காவில் 54 நாடுகள் உள்ளன. இவற்றில் வெறும் மூன்று நாடுகளில், ஒரு சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு இன்னும் தடுப்பு மருந்து சென்று சேரவே இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.