உலகம் செய்தி ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் ஏற்படும் சர்வதேச அரசியல் பதட்டம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை தடுக்கும் வகையில், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்தன. ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டார்.அதன் பயனாக, 2015ல், ஈரான் நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். அதன் முடிவில், ‘அணு ஆயுதம் தயாரிப்பதில்லை’ என்று, ஈரான் உறுதி அளித்தது. மேலும், தன் அணு உலைகளை சர்வதேச ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தவும் ஒப்புக்கொண்டது.இதையடுத்து, அந்நாட்டின் மீது, பல்லாண்டுகளாக நீடித்து வந்த பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் நீக்கியது; அமெரிக்கா, முழுமையாக தடைகளை நீக்காத போதிலும், இந்தியா போன்ற பிற நாடுகள், ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதற்கு, இடையூறாக இருந்த தடைகளை, வாபஸ் பெற்றுக் கொண்டது.இந்த தடை வாபஸ் மூலம், ஈரான் மீண்டும் சர்வதேச எண்ணெய், இயற்கை எரிவாயு சந்தையில் முழு வீச்சில் களம் இறங்கியது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில், கடந்தாண்டு துவக்கத்தில் ஆட்சிக்கு வந்த அதிபர் டிரம்ப், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் அறிவிப்பை, நேற்று டிரம்ப் வெளியிட்டார். அவர் கூறியதாவது:ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம், குறைபாடுகளை கொண்டது. அந்நாடு அணு ஆயுதம் தயாரிப்பதையோ, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை தயாரிப்பதையோ, அந்த ஒப்பந்தம் தடுக்கவில்லை.ஒப்பந்தம் நிறைவேறிய இரண்டு ஆண்டுகளில், ஈரானின் ராணுவ பட்ஜெட், 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கையும் அதை உறுதி செய்துள்ளது.எனவே, ஒபாமா அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்கிறது. இன்று முதல், ஈரான் மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும். ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்நாடு விரும்பினால், நாங்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், புதிய ஒப்பந்தம் பற்றி பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி விடாமல் இருப்பதற்காக, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பெருமுயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களது முயற்சிகளை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை.ஒபாமா அதிபர் பதவி வகித்தபோது, வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் கெர்ரி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களிடமும், அமெரிக்க அரசியல் பிரமுகர்களிடமும் பேசி, ‘எப்படியாவது, இந்த ஒப்பந்தத்ததை காப்பாற்றுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்து வந்தார்.அதையறிந்த டிரம்ப், ஜான் கெர்ரியை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டார். அப்போதே, ‘டிரம்ப், ஈரான் உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போகிறார்’ என்று, சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதை, நேற்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம், டிரம்ப் உறுதி செய்து விட்டார்.

ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது, ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தமாக, இந்த ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கருதப்பட்டது. இந்த ஒப்பந்தம் உருவானபோது, இஸ்ரேல் நாடு கடுமையாக எதிர்த்தது. அப்போது, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் தீவிரமாக இருந்த, டிரம்ப்பும் தீவிரமாக எதிர்த்தார்.’தான் அதிபர் பதவியேற்றால், முதல் வேலையாக, ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவேன்’ என்றும் பல முறை அறிவித்தார். ஆனால், அதிபர் பதவியேற்ற உடன், அவ்வாறு செய்யவில்லை.வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த ரெக்ஸ் டில்லர்சன் உள்ளிட்டோர் அறிவுரையால், டிரம்ப் நடவடிக்கை தவிர்க்கப்பட்டு வந்தது. சமீபத்தில், டில்லர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக, டிரம்ப் அறிவித்துள்ளார்.’நான் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றியே தீருவேன்’ என்று நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு வெளியான உடன் பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, ‘முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுத்த அதிபர் டிரம்புக்கு நன்றி’என்றார். ஆனால், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள், டிரம்ப் முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் முறிந்து போவதால், சர்வதேச நாடுகள், பொருளாதார ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். ஈரானில் இருந்து, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள், அமெரிக்க அரசின் விரோதத்தை சம்பாதிக்கும் நிலை ஏற்படும். அதற்கு அஞ்சி, பெரும்பாலான நாடுகள், ஈரானில் இருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதியை தவிர்க்கும் நிலை உருவாகும். அதையும் மீறி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஈரானுடன் வர்த்தக உறவு கொண்டிருக்கும் நாடுகள், நிறுவனங்களை, பொருளாதார ரீதியாக தடை விதித்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும். கடந்த காலங்களில், இந்தியா உள்ளிட்ட நாடுகளும், இத்தகைய பிரச்னையை எதிர்கொண்டு வந்தன. எனவே, அமெரிக்க அதிபரின் தன்னிச்சையான நடவடிக்கை, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலையை, தாறுமாறாக உயரச் செய்து விடும் என்றும், அதன் மூலம், பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயரும் என்றும், பல்வேறு நாடுகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.