‘உதயன்’ நண்பர் சோதி ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும் கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் பிரம்டன் மற்றும் மிசிசாகா, நோர்த்யோர்க் ஈற்;றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து ஆற்றிவந்த திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) மற்றும் அவர்களின் துணைவியார் திருமதி சோதியும் ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு மரணத்தை தழுவினர்.
தமது மூன்று பிள்ளைச் செல்வங்களை தவிக்க விட்டு சென்ற இந்த அன்புத் தம்பதியின் இழப்புக்களினால் அவர்களது செல்வப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு நாமும் எமது கண்ணீரை அஞ்சலிகளாக்குகின்றோம். தவித்தபடி கண்ணீர் விடுகின்றோம்.
சோதியின் குடும்பமே எமது உதயன் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவுக் கரமாக விளங்கியது. நாம் கலங்கிப் போய் உள்ளோம். ஒரு அழகியதும் அற்பதமானதுமான குடும்பத்தின் தலைமைப் பீடம், கொடிய நோய் ஒன்றினால் தகர்க்கப்படடு விட்டது என்பதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அமரர் சோதி அவர்கள் மனந்திறந்து பேசும் பண்பு கொண்டவர். எப்போதும் அன்பை மட்டுமே வழங்கும் மனது கொண்டவர்.
அவரது துணைவியாரின் இழப்பை அறிந்து கொண்ட பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட தங்கள் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டனர். பத்திரிகையின் பிரதிகள் சரியான நேரத்திற்கு அந்தந்த இடங்களில் வைக்கப்படுவதை எப்போதும் மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்தவர்.

வெள்ளிக்கிழமை தவிர்நத ஏனைய நாட்களையும் உதயனுக்காக அர்ப்பணித்து நின்றவர். அவரது துணைவியார் மிகவும் அமைதியானவர். அவருடனான உரையாடல்கள் சில வேளைகளில் புன்னகை செய்வதோடு முடிந்து விடும்.
மறைந்த சோதி அவர்களும் அவரது துணைவியார் அவர்கள் ஒன்றாக முழு நேரப் பணியாற்றிய இடம் ரொரோன்ரோ விமான நிலையத்திற்கு அருகில் இயங்கும் ஒரு நிறுவனமாகும். அங்கு கூட இவர்கள் இருவரும் தங்கள் சிறந்த பணிக்காக உரிமையாளர்களாலும், சக பணியாளர்களாலும் பாராட்டப்பட்டவர்கள். நேசிக்கப்பட்டார்கள்.
பெற்றோர்கள் இருவரும் தாம் கடமைகளில் கண்ணாக இருந்து தங்கள் முதலாவது மகளை ஒரு சட்டத்தரணியாக்கி மகிழ்ந்தவர்கள். ஏனைய இரண்டு பிள்ளைகளும் கல்வியில் சிறப்பாகத் தேறி சாதனைகள் படைத்து வருகின்றனர்.
இவ்வாறான சிறப்புக்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவனும் தலைவியும் கொடிய நோய் ஒன்றினால் அழிக்கப்பட்ட இந்த சம்பவம் எம்மை மட்டுமல்ல, அவர்களது அன்புப் பிள்ளைகள் உறவினர்களை மட்டுமல்ல, இந்த இழப்புக்கள் பற்றி அறிகின்றவர்களின் கண்களை குளமாக்கும்.
இறந்தவர்கள் மீண்டு வரமாட்டார்கள் என்பதும் அவர்களது நற்பண்புகள் தான் எம்மோடு கூடவே பயணிக்கப்போகின்றன என்பதும் நாம் அறிந்தவதையே. எனவே நாம் அனைவரும் சோதி தம்பதியின் பிள்ளைச் செல்வங்களுக்காகவும் பிராரத்தனை செய்த வண்ணம் அவர்களது எதிர்காலம் சிறப்புடன் இருக்க துணையாக இருப்போம் என்ற வார்த்தைகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.