உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்-துாது அனுப்பினாரா துர்கா?

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆண்டாள் பக்தை. ‘ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் நல்லதல்ல; உண்ணாவிரதம் வேண்டாம்’ என வைஷ்ணவ பெரியவர்களிடம், துர்கா அறிவுறுத்தியதாகவும், தொடர்ந்து பேச்சு நடத்திய அவர்கள், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஜீயரின் உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ஆண்டாளை அவதுாறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆண்டாள் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும்’ என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்துார்

மணவாளமாமுனிகள் சன்னிதியின் சடகோபராமானுஜ ஜீயர்நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார்.

இரண்டாம் நாளான நேற்று காலை, 11:30 மணிக்கு திருக்கோஷ்டியூர் மாதவன், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர். இதை ஏற்க மறுத்த ஜீயர், ‘ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கைவிடமுடியும்’ என்றார்.
‘விரைவில் ஆண்டாள் பக்தர்கள் மனமகிழும் வகையில் நல்ல செய்தி வரும். அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும்’ என, குழுவினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாகஒத்திவைப்பதாக அறிவித்த ஜீயர், ‘பிப்., 3க்குள் வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும்.’இல்லையெனில் பிப்., 5 முதல், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன். அதுவரை

அறநெறி போராட்டங்கள் தொடரும்’ என, உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.