உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறியதற்காக கர்நாடக முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்திற்கு ஜூலை 11ஆம் தேதிவரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், கடந்த 2016 டிசம்பர் 15, 2017 ஜனவரி 4 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் இதைப்போல தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த மூன்று தடவையும் உத்தரவை நிறைவேற்ற கர்நாடகம் மறுத்துவிட்டது. இப்போதும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்க முடியாது என கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் ஆணையைத் தனிநபர் யாராவது மீறினால் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தனது ஆணைகளை மீறிவரும் கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

உடனடியாக கர்நாடக முதல்வரை உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தனது ஆணையை மீறியதற்காக அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மதிப்பும், அதிகாரமும் நிலைநிறுத்தப்படும். இல்லையென்றால் ஒவ்வொரு மாநிலமாக உச்ச நீதிமன்ற ஆணைகளை நிறைவேற்ற மறுக்கும் நிலை உருவாகிவிடும் என எச்சரிக்கிறேன்” என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.