ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

‘ஈரானில் கொரோனாவின் கொலைவெறிக்கு, 10 நிமிடங்களுக்கு ஒரு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது’ என, ஈரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

latest tamil news

கொரோனா வைரஸ் தொற்று தன் கொலைவெறிக்கு உலகம் முழுவதும் இதுவரை, 10 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா பரவிய சீனா, தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால், 170க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் ஈரானும் இந்த வைரசால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் சீனாவில் – 3,248, இத்தாலியில் – 3,405, ஈரானில் – 1,284 பேர் பலியாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

latest tamil news

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஈரான் மீது, அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ஈரானில் அதிவிரைவாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு அரசு திணறி வருகிறது. போதுமான மருத்துவ உபகரணங்களோ, மருத்துவப் பணியாளர்களோ அங்கு இல்லை. வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவோ, வைரஸ் இருக்கிறதா எனச் சோதனைகள் மேற்கொள்ளவோ முடியாமல் தவித்து வரும் ஈரான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனக் கையேந்தியுள்ளது. ஈரானுக்கு அதி நவீன மருத்துவ உபகரணங்களை இலவசமாக கொடுத்துள்ளது இந்தியா. சீனா மருத்துவக் குழுவினரை அனுப்பியுள்ளது.

latest tamil news

இந்நிலையில், ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,407 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த 18ம் தேதி 149 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 19ம் தேதி 147 பேர் இறந்துள்ளனர். நேற்று மட்டும், புதிதாக, 1,046 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

latest tamil news

ஈரானில் கொரோனா வைரஸ் நிலை பற்றி, ஈரான் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழக்கிறார். ஒரு மணி நேரத்துக்கு, 50 பேர் வைரசால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் தகவலைக் கருத்தில் கொண்டு, பயணங்கள் மற்றும் பண்டிகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு, ஈரான் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ‘உலக நாடுகள் அனைத்தும் ஈரானுக்கு உதவ முன்வர வேண்டும்’ என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.