இஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் – ஜெருசலேம் வன்முறை

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் கடந்த மாதம் மையப்பகுதியில் இருந்தே அவ்வப்போது கடுமையான மோதல்கள் ஏற்பட்டது. பாலஸ்தீனியர்கள் தங்கள் மதத்தின் புனித மாதமாக கருதும் ஏப்ரல் மாத மையப்பகுதியில் ஜெருசலேமின் பழைய நகர் டமாஸ்கர் நுழைவாயில் அருகே அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் இரவு நேர வழிபாட்டிற்காக கூடுகின்றனர்.

ஆனால், அங்கு வழிபாடு செய்வதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், வழிபாடுகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடத்தொடங்கினர்.

அதேவேளை, இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் இஸ்ரேலியர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர்.

அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். ஷைக் ஜாரா மாவட்டத்தில் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் புனிதத்தளங்கள் அமைந்துள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த மோதல்களை தொடர்ந்து ஷைக் ஜாரா மாவட்டத்தில் அருகே வசித்து வரும் சில பாலஸ்தீன குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பான வழக்கை இஸ்ரேல் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இஸ்ரேலிய – அரபு நாடுகளுக்கு இடையே 1967-ம் ஆண்டு போர் நடைபெற்றது. இந்த போரில் இஸ்ரேல் வெற்றிபெற்று மேற்கு கரை, காசா முனை மற்றும் ஜோர்டானிடம் இருந்த கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை கைப்பற்றியது. அதன் வெற்றிக்கொண்டாட நாளாக கடந்த திங்கள் கிழமை (10-ம் தேதி) இஸ்ரேலியர்களால் அனுசரிக்கப்படவிருந்தது. இது இஸ்ரேலியர்கள்-பாலஸ்தீனர்கள் இடையே மோதல் போக்கை அதிகரித்தது.

ஜெருசலேமின் பழைய நகர் மையப்பகுதியில் இஸ்ரேலியர்களின் முக்கிய வழிபாட்டு தளமான டெம்பிள் மவுண்ட் அமைந்துள்ளது. அந்த பகுதிக்கு மிக அருகே பாலஸ்தீனர்களின் முக்கிய வழிபாட்டு தளமான டூம் ஆப் தி ராக் மற்றும் அல்-அக்‌ஷா ஆகியவை அமைந்துள்ளன. கிருஷ்தவர்களின் முக்கிய வழிபாட்டு தளமும் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது.

ஜெருசலேமின் அனைத்து பகுதியும் தங்களுக்கு சொந்தமானது என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், தங்களின் வருங்காலத்தில் அமைய உள்ள நாட்டிற்கு தலைநகராக கிழக்கு ஜெருசலேம் அமைய வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர். ஜோர்டானில் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இது போன்ற குழப்பங்களால் இஸ்ரேல்-பாலஸ்தீன உறவில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை அல்-அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. பாலஸ்தீனர்கள் கற்கலைக்கொண்டு தாக்கினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனைபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலிய பதிலடி தாக்குதலில் ஹாமாஸ் அமைப்பினர் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருவதால் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.