இஸ்ரேலிடம் இருந்து வாங்கும் உளவு விமானங்களை சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் : இந்தியா

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்தன. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வந்தது.

இதற்கிடையில், போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்திய-சீன ராணுவ மட்டத்தில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டத்தை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் குவித்து வைத்திருந்த படைகளை திரும்பப்பெற்றுள்ளன.

ஆனாலும், பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால் இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினரும், விமானப்படையின் சிறப்பு பிரிவினரும் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களும் லடாக் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து ஹிரோன் டிபி ரக 4 ஆளில்லா விமானங்களை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய பாதுகாப்பு படை ராணுவ ஆயுதங்களை கொள்முதல் செய்யாமல் குத்தகைக்கு எடுக்கும் நடமுறை இதுவே முதன்முறை ஆகும்.

இஸ்ரேல் விண்வெளித்துறை நிறுவனம் உருவாக்கியுள்ள ஹிரோன் டிபி ஆளில்லா விமானங்கள் அனைத்து காலநிலையையும் சமாளிக்ககூடியதாகவும், உளவு வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கக்கூடியதாவும் உள்ளது.

இந்த ஆளில்லா விமானத்தின் ஒரு சில குறிப்பிட்ட ரகங்களில் ஆயுதங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்தியா குத்தகைக்கு எடுத்துள்ள ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை இணைக்கும் வசதிகள் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் தவணையாக 2 ஆளில்லா விமானங்கள் இந்தியாவுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர் 3 மாதங்கள் இடைவேளைக்கு பின்னர் எஞ்சிய 2 ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து வாங்கப்படும் இந்த ஆளில்லா விமானங்கள் சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லைப்பகுதியில் உடனடியாக பாதுகாப்பு மற்றும் உளவுப்பணியில் ஈடுபடுத்தப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்புப்படைக்கு இஸ்ரேலிய ஆளில்லா உளவு விமானங்களின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும் என கருத்தப்படுகிறது.