இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

முதல்வர் தொடங்கி வைத்த மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தப்பட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். சில வாரங்களில் அணை முழுவதும் தூர்வாரி முடிக்கப்படும். அதனால் அணையின் கொள்ளளவு 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது. அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தேவையான அளவுக்கு இலவசமாக அள்ளிச் செல்லலாம் என்று முதல்வர் அறிவித்திருந்ததால், வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்காக மேட்டூர் வட்டாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விவசாயிகள் வந்திருந்தனர். முதல்வர் முன்னிலையில் சில வாகனங்களுக்கு மட்டும் இலவசமாக மண் வழங்கிய அதிகாரிகள், முதல்வர் அங்கிருந்து சென்ற பின்னர் ஒரு டிராக்டருக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால்தான் வண்டல் மண் வழங்க முடியும் என்று கூறிவிட்டனர்.
இதனால் விவசாயிகள் மண் வாங்குவதற்கு மறுத்து வெளியேறிவிட்ட நிலையில், மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, மேலாண்மை செய்வதற்கு தமிழக அரசிடம் தெளிவான கொள்கையோ, செயல்திட்டமோ இல்லை. அதனால்தான் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் வண்டல் மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரு லாரி வண்டல் மண்ணுக்கு ரூ.1,500 வீதம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல் கொள்ளையை தாராளமாக அனுமதிக்கின்றனர்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.