இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது.

ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், “இனத் தேசியவாதத்தில் மதத்தின் பங்கு” என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில், மற்றும் கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் ஆகியவற்றையும் முனைவர் சுரேன் ராகவன் பெற்றுள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் பௌத்த கற்கைகளுக்கான ஒக்ஸ்ஃபோர்ட் நிலையத்தில், ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேன், பல ஆண்டுகள் அங்கு ஆய்வுச்செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவராக கூறப்படும் அவர், இலங்கை அரசங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புகளுக்கு இடையேயான சமாதான உடன்படிக்கைத் தருணங்களிலும், இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் பங்கு கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்களும், இன்று பிற்பகலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றிய, கீர்த்தி தென்னக்கோன், ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைப் பிரிவின், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்ம திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டிருந்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக இதற்கு முன்னர், நிலுகா ஏக்கநாயக்க பதவி வகித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கையின் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

முனைவர் சுரேன் ராகவன்

மேல் மாகாண ஆளுநராக அஸாத் சாலி நியமிக்கப்பட்ட அதேவேளை, தென் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்த மைத்திரி குணரத்ன, மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சராக செயற்பட்ட சரத் ஏக்கநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதுடன், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்த பேசல ஜயரத்ன, வட மேல் மாகாண ஆளுநராக, இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

அதே நாளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கையின் தென் மாகாணத்தின் ஆளுநர் பதவி, இன்னமும் வெற்றிடமாகவே தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.