இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆனோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபை ஒத்தி வைப்பு வேளையிலும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்
இலங்கை உள்ளாட்சி தேர்தல் தாமதம்: அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாயின், தனித்தனியாக சபைக்கு வெளியில் அஞ்சலி செலுத்துமாறு அவைத் தலைவர் சபையில் அறிவித்தார்.

இதேவேளை, காலி- கிங்தொட்டை பகுதியில் நடத்தப்பட்ட சிறுபான்மையினத்தவர் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் சபை அமர்வின்போது நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.